Sunday 2 August 2015











வாசிப்பு பகுதி 

உயர்நிலை 2 விரைவு 


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும்
அரிது கூன், குருடு,செவிடு,பேடு நீங்கி பிறத்தல்.

என்கிறார் ஔவை மூதாட்டி. இத்தகைய அரிய மனிதப் பிறவியில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் மூன்று முக்கிய பிரிவுகளாகவே அமைந்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான பருவம்தான் இளமைப் பருவம். இந்த இளமைப்பருவம் என்பது 13 வயது முதல் 19 வயதுவரை உள்ளது ஆகும். இந்த 7 வயது இடைவெளியில்தான் பல இளைஞர்கள் தம் வாழ்வின் வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்துஎதிர்காலத்திற்கான படிகளில் ஏறத் தொடங்குவர். ஆனால் இந்த வயதில் ஆடம்பர வாழ்க்கையைக்  கனவு காணத் தொடங்கினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரை படைக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
      இன்றைய இளைஞர்கள் தான் நாட்டின் நாளைய தலைவர்கள். அவர்கள்தான் நம் நாட்டையே எதிர்காலத்தில் வழி நடத்திச் செல்லக் கூடியவர்கள். அவர்களின் முன்னேற்றம்தான் நாட்டின் எதிர்கால முன்னேற்றம். ஆனால் இக்கால இளைஞர்கள் தம் முன்னேற்றத்தைத் தவிர மற்ற அனைத்திலும் அக்கறைச் செலுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஆடம்பரமான வாழ்க்கையே அவர்களின் இன்றைய குறிக்கோளாக அமைந்துவிட்டது. இந்த ஆடம்பர வாழ்க்கையால் அவர்கள் எதிர் நோக்கும் தடைகள் என்ன?
      முதலில் ஆடம்பர வாழ்வு என்பது என்ன? மனிதன் தன் எளிமையான வாழ்க்கையை விட்டுவிட்டு பணத்தையே கடவுளாக எண்ணி, பலவிதமாக தன் வாழ்க்கைக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி பிறரிடம் தன்னைப் பற்றிய எண்ணத்தை உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறான். இதற்கெல்லாம் முக்கிய காரணம் நண்பர்களின் செல்வாக்கும், பெற்றோர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்தான்.. நண்பன் ஒரு பொருளை வைத்திருப்பதைப் பார்த்து தானும் அத்தகைய  பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்கான பணத்தை எவ்வழியிலாவது பெற்று தன் மனத்தில் எண்ணிய அந்தப் பொருளை வாங்குகிறான் ஒருவன். ஆனால் தன் பெற்றோர் அந்தப் பணத்தைச் சம்பாதிக்க  இரவுபகல் பாராமல் எவ்வாறு துன்பப்பட்டுள்ளனர் என்பதை அறியாமல், பாடுபட்டு பெற்றோர் சேர்த்த பணத்தை வீண் செலவு செய்கின்றனர்.